திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.16 திருப்புகலூர்
செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங்
கையர் கனைகழல் கட்டிய காலினர்
மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்
பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே.
1
மேகநல் ஊர்தியர் மின்போல் மிளிர்சடைப்
பாக மதிநுத லாளையோர் பாகத்தர்
நாக வளையினர் நாக வுடையினர்
போகர் புகலூர்ப் புரிசடை யாரே.
2
பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக்
கருந்தாழ் குழலியுந் தாமுங் கலந்து
திருந்தா மனமுடை யார்திறத் தென்றும்
பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
3
அக்கார் அணிவடம் ஆகத்தர் நாகத்தர்
நக்கார் இளமதிக் கண்ணியர் நாடொறும்
உக்கார் தலைபிடித் துன்பலிக் கூர்தொறும்
புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே.
4
ஆர்த்தார் உயிரடும் அந்தகன் றன்னுடல்
பேர்த்தார் பிறைநுதற் பெண்ணின்நல் லாள்உட்கக்
கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற் றீருரி
போர்த்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
5
தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக்
காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர்
சேம நெறியினர் சீரை யுடையவர்
பூமன் புகலூர்ப் புரிசடை யாரே.
6
உதைத்தார் மறலி உருளவோர் காலாற்
சிதைத்தார் திகழ்தக்கன் செய்தநல் வேள்வி
பதைத்தார் சிரங்கரங் கொண்டுவெய் யோன்கண்
புதைத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
7
கரிந்தார் தலையர் கடிமதில் மூன்றுந்
தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண
விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை
புரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
8
ஈண்டார் அழலி னிருவருங் கைதொழ
நீண்டார் நெடுந்தடு மாற்ற நிலையஞ்ச
மாண்டார்தம் என்பு மலர்க்கொன்றை மாலையும்
பூண்டார் புகலூர்ப் புரிசடை யாரே.
9
கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி
இறுத்தார் இலங்கையர் கோன்முடி பத்தும்
அறுத்தார் புலனைந்தும் ஆயிழை பாகம்
பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.54 திருப்புகலூர் - திருநேரிசை
பகைத்திட்டார் புரங்கள் மூன்றும்
    பாறிநீ றாகி வீழப்
புகைத்திட்ட தேவர் கோவே
    பொறியிலேன் உடலந் தன்னுள்
அகைத்திட்டங் கதனை நாளும்
    ஐவர்கொண் டாட்ட வாடித்
திகைத்திட்டேன் செய்வ தென்னே
    திருப்புக லூர னீரே.
1
மையரி மதர்த்த ஒண்கண்
    மாதரார் வலையிற் பட்டுக்
கையெரி சூல மேந்துங்
    கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரிந் தகமி டற்றே
    அடைக்கும்போ தாவி யார்தாஞ்
செய்வதொன் றறிய மாட்டேன்
    திருப்புக லூர னீரே.
2
முப்பதும் முப்பத் தாறும்
    முப்பதும் இடுகு ரம்பை
அப்பர்போல் ஐவர் வந்து
    அதுதரு கிதுவி டென்று
ஒப்பவே நலிய லுற்றால்
    உய்யுமா றறிய மாட்டேன்
செப்பமே திகழு மேனித்
    திருப்புக லூர னீரே.
3
பொறியிலா அழுக்கை யோம்பிப்
    பொய்யினை மெய்யென் றெண்ணி
நெறியிலா நெறிகள் சென்றேன்
    நீதனேன் நீதி யேதும்
அறிவிலேன் அமரர் கோவே
    அமுதினை மண்ணில் வைக்குஞ்
செறிவிலேன் செய்வ தென்னே
    திருப்புக லூர னீரே.
4
அளியினார் குழலி னார்கள்
    அவர்களுக் கன்ப தாகிக்
களியினார் பாடல் ஓவாக்
    கடவூர்வீ ரட்ட மென்னுந்
தளியினார் பாத நாளும்
    நினைவிலாத் தகவில் நெஞ்சந்
தெளிவிலேன் செய்வ தென்னே
    திருப்புக லூர னீரே.
5
இலவினார் மாதர் பாலே
    இசைந்துநான் இருந்து பின்னும்
நிலவுநாள் பலவென் றெண்ணி
    நீதனேன் ஆதி உன்னை
உலவிநான் உள்க மாட்டேன்
    உன்னடி பரவு ஞானஞ்
செலவிலேன் செய்வ தென்னே
    திருப்புக லூர னீரே.
6
காத்திலேன் இரண்டும் மூன்றுங்
    கல்வியேல் இல்லை என்பால்
வாய்த்திலேன் அடிமை தன்னுள்
    வாய்மையால் தூயே னல்லேன்
பார்த்தனுக் கருள்கள் செய்த
    பரமனே பரவு வார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத்
    திருப்புக லூர னீரே.
7
நீருமாய்த் தீயு மாகி
    நிலனுமாய் விசும்பு மாகி
ஏரடைக் கதிர்க ளாகி
    இமையவர் இறைஞ்ச நின்று
ஆய்வதற் கரிய ராகி
    அங்கங்கே யாடு கின்ற
தேவர்க்குந் தேவ ராவார்
    திருப்புக லூர னாரே.
8
மெய்யுளே விளக்கை ஏற்றி
    வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி
    உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்
    அவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன்
    திருப்புக லூர னீரே.
9
அருவரை தாங்கி னானும்
    அருமறை யாதி யானும்
இருவரும் அறிய மாட்டா
    ஈசனார் இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று
    கண்வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார்
    திருப்புக லூர னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.106 திருப்புகலூர் - திருவிருத்தம்
தன்னைச் சரணென்று தாளடைந்
    தேன்றன் அடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல்
    செய்வன கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை
    கட்டறுத் தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ
    லோகத் திருத்திடுமே.
1
பொன்னை வகுத்தன்ன மேனிய
    னேபுணர் மென்முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே
    தமியேற் கிரங்காய்
புன்னை மலர்த்தலை வண்டுறங்
    கும்புக லூரரசே
என்னை வகுத்திலை யேலிடும்
    பைக்கிடம் யாதுசொல்லே.
2
இப்பதிகத்தில் மூன்றாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
3
பொன்னள வார்சடைக் கொன்றையி
    னாய்புக லூர்க்கரசே
மன்னுள தேவர்கள் தேடு
    மருந்தே வலஞ்சுழியாய்
என்னள வேயுனக் காட்பட்
    டிடைக்கலத் தேகிடப்பார்
உன்னள வேயெனக் கொன்றுமி
    ரங்காத உத்தமனே.
4
இப்பதிகத்தில் ஐந்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
5
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
ஓணப் பிரானும் ஒளிர்மா
    மலர்மிசை உத்தமனுங்
காணப் பராவியுங் காண்கின்
    றிலர்கர நாலைந்துடைத்
தோணற் பிரானை வலிதொலைத்
    தோன்தொல்லை நீர்ப்புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக்
    குறுகா கொடுவினையே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com